அணுசக்தி மேம்பாட்டுத் திட்டத்தில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானின் மீது குண்டு வீசுப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், ஈரான் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குண்டுவீச்சு மிரட்டலால் ஈரான் பதற்றமடையவில்லை என்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணைகளை நிலை நிறுத்திவருவதாகவும் தெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் சமீபத்தில் தனது நிலத்தடி ஏவுகணை ஆயுதக் கிடங்கின் காட்சிகளை வெளியிட்டது. ஈரானிய புரட்சிகர காவல்படை அந்த இடத்தை ‘ஏவுகணை நகரம்’ என்று விவரித்தது. ஈரானிய துருப்புக்கள் இஸ்ரேலிய தேசியக் கொடியை மிதிப்பதையும் காட்சிகள் காட்டுகின்றன.
அமெரிக்கா அவர்களைத் தாக்கினால் நிலத்தில் இருந்து பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த ஏவுகணைகளைத் தயாரித்து வருவதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் தனது ஏவுகணைகளை ஏவுவதற்குத் தயாராக இருக்கும் நிலையில் அமைத்துள்ளதாகவும் இவை வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராகத் தற்காத்துக் கொள்ளக்கூடிய ஏவுகணைகள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
‘நாங்கள் பேச்சுவார்த்தைகளைத் தவிர்க்கவில்லை. வாக்குறுதிகளை மீறுவதே இதுவரை எங்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நம்பகமானவர்கள் என்பதை அவர்கள் நிரூபிக்கட்டும்’ என்று டிரம்பின் அச்சுறுத்தலுக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷ்மெர்கா பதிலளித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும், ஈரானை அணுசக்தி திட்டத்தை உருவாக்க அனுமதிக்க முடியாது என்றும் ஈரானுக்கு வாஷிங்டன் பதிலளித்துள்ளது.
யுரேனியம் செறிவூட்டல் மூலம் அணு ஆயுதங்களை உருவாக்க ஈரான் இலக்கு வைத்துள்ளதாக மேற்கத்திய சக்திகள் பல பத்தாண்டுகளாக வாதிடுகின்றன. இருப்பினும், பொதுமக்களின் எரிசக்தி தேவைகளுக்காக இதைச் செய்வதாக ஈரான் தொடர்ந்து கூறிவருகின்றது.