ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே 7 கிலோ எடையுள்ள “குறுகிய தூர எறிகணையால்” கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க “கிரிமினல்” அரசின் ஆதரவுடன் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக IRGC குற்றம்சாட்டியுள்ளது.
“நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், இந்த பயங்கரவாத நடவடிக்கையானது சுமார் 7 கிலோகிராம் எடையுள்ள வெடிபொருட்களைக் கொண்டு குறுகிய தூர எறிகணையைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது, மேலும் ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு, விருந்தினர்கள் வசிக்கும் பகுதிக்கு வெளியில் நிகழ்ந்தது” என்று ஈரான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈரானின் பழிவாங்கல் “கடுமையானதாக” இருக்கும் என்றும், உரிய நேரத்தில் இதற்கான பதிலடி கிடைக்கும் என்று எச்சரித்துள்ளது. ஈரானின் இந்த எச்சரிக்கை காசா போரின் காரணமாக பதற்றத்தில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
“தியாகி இஸ்மாயில் ஹனியேவின் இரத்தத்திற்கு பழிவாங்கப்படும், மேலும் பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்” என்றும் எச்சரித்துள்ளது.
கத்தாரில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஹமாஸின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய ஹனியே, ஜூலை 31 அன்று அதிகாலை 2 மணியளவில் தெஹ்ரானில் அவரது வீட்டின் முன் கொல்லப்பட்டார்.
தெஹ்ரானில் ஈரானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் கலந்துகொண்ட சில மணி நேரங்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த படுகொலை சம்பவத்தை நடத்தியதாக இஸ்ரேல் மீது ஈரான் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இதனை இஸ்ரேல் இதுவரை மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.