சென்னை :

வேளாண் மசோதாக்களை பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றிய மத்திய அரசு. விவசாயிகளுக்கு கொடுத்ததைப்போல் மற்றுமொரு தேன் தடவிய மருந்தை தொழிலாளர்களுக்கு வழங்க தயாராகி வருகிறது.

300 க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், அரசு அனுமதியின்றி தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தவும், பணிநீக்கம் செய்யவும் அதிகாரமளிக்கும் தொழில்துறை உறவுகள் குறியீட்டு மசோதா சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ​​100 க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட தொழில்துறை நிறுவனங்கள் மட்டுமே அரசாங்கத்தின் அனுமதியின்றி தங்கள் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவும் பணிநீக்கம் செய்யவும் அனுமதிக்கப்படுள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை 300 என்று அதிகரித்திருப்பது, தொழிலாளர்கள் மீது நடவடிக்கையெடுக்க நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளிப்பதாக உள்ளது.

இதுகுறித்த அறிக்கை வழங்கியுள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே 300 தொழிலாளர் என்ற வரைமுறையில் செயல்படுகின்றன, இதனால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதுடன் பணிநீக்கம் குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்த மசோதாவில், தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் 60 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்துறை உறவுகள் குறியீட்டு மசோதாவின் இந்த சரத்துகள், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை கடுமையாக கட்டுப்படுத்துவதாகவும், பணிநீக்கங்கள் மற்றும் பணிநீக்கம் தொடர்பான வரம்பை உயர்த்தியிருப்பது தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கும் என்றும் இந்த மசோதாக்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு விழுந்த அடியாகும் என்றும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.

எனினும், வேளாண் மசோதாக்களை எதிர்த்த எதிர்க்கட்சிகளின் குரலை நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் ஒலிக்கவிடாமல் முடக்கி வரும் மத்திய அரசு தொழில்துறை உறவுகள் குறித்த மசோதாவையும் நிறைவேற்றும் என்ற கருத்து பரவலாக நிலவிவருகிறது.