ஸ்ரீநகர்:
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதி களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் காஷ்மீர் மாநில ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர்.
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. அவர்களை தடுக்கும் போராட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹெப்-ஷிர்மால் (Heff-Shirmal) என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அந்த இடத்தை, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
இதையறிந்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி செல்லும் நோக்கில், ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். ராணுவத்தினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
விசாரணையில், சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் பெயர் ஷாம்சூல் என்பது தெரிய வந்தது. இவன் கடந்த ஆண்டுதான் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தான் என்றும், இவனது சகோதரர் ஐபிஎஸ் அதிகாரி என்றும், அவர் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஷாம்சூல் யுனானி மருத்துவம் படித்த மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.