மனைவியை அடித்து உதைத்த ஐ.பி.எஸ்.அதிகாரி : வீட்டில் எடுத்த வீடியோவை வைரலாக்கிய மகன்..
 
உயர்ந்த இடங்களில் நடக்கும் சண்டைகளும், சச்சரவுகளும், முன்பெல்லாம் வேலைக்காரர்கள் மூலம், வெளி உலகத்துக்கு அம்பலமாகும்.
 
இப்போது சி.சி.டி.வி.காமிராக்கள், பெரிய இடத்துச் சமாச்சாரங்களை, சினிமா படம் போல் ஊரெல்லாம் வெளிச்சம் போட்டு காட்ட ஆரம்பித்துள்ளன.
 
அப்படி ஒரு சம்பவம்.
 
ஐ.பி.எஸ். அதிகாரியான புருஷோத்தம் சர்மா, மத்தியப்பிரதேச மாநிலத்தில் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி வகித்து வருகிறார்.
வீட்டில், தனது மனைவியை, மாட்டை அடிப்பது போல் சர்மா, துவைத்து எடுத்துள்ளார். மனைவியின் தலை முடியை பிடித்து இழுத்து, அவரை தரையில் கீழே தள்ளும்  காட்சிகள்  சர்மாவின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.
 
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, மத்தியப்பிரதேச மாநிலத்தையே பரபரக்கச் செய்துள்ளது.
 
வருமான வரித்துறையில் உதவி ஆணையராக பணியாற்றும் சர்மாவின் மகன் பார்த் மூலம் இந்த வீடியோ வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 
அந்த வீடியோவை மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் மிஸ்ராவுக்கு,  பார்த் அனுப்பியதோடு, தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
வீடியோவை பார்த்து அதிர்ந்து போன முதல்-அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஐ.பி.எஸ். அதிகாரி சர்மாவை பதவியில் இருந்து விடுவித்து அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார்.
 
‘வீட்டு காமிராவில் பதிவான வீடியோ பதிவு ஊரெல்லாம் பரவியதால் கடும் ஆத்திரத்தில் உள்ள சர்மா, ‘’ நான் செய்தது கிரிமினல் குற்றமல்ல. இது குடும்பப் பிரச்சினை. என் மனைவி என் மீது 2008 ஆம் ஆண்டிலும் இது போல் புகார் அளித்துள்ளார்.
ஆனால் அப்போது முதல் என்னுடன் தான் வசிக்கிறார். எல்லா சவுகரியங்களையும் அனுபவித்து வந்துள்ளார். எனது பணத்தில் வெளிநாட்டுக்கெல்லாம் சென்று வந்துள்ளார்.’’ என்று கொந்தளிக்கிறார்.
 
-பா.பாரதி.