சென்னையில் நேற்றிரவு சி.எஸ்.கே. மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது.
2025 ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டம் இது என்பதால் இதனைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
இதற்காக மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு மற்றும் போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச மெட்ரோ ரயில் பயணம் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்றிரவு போட்டியை பார்த்து விட்டு தங்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
கால்வின் மற்றும் சித்தார்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த இருவரும் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அதிவேகமாக பைக்கில் வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலைய தூணில் மோதி பலியாகியுள்ளனர்.
இவர்களது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ள செயின்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து காவல் துறையினர் இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.