ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கர்நாடக முழுவதும் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 ஆண்டுகால ஐ பிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய RCB 6 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதையடுத்து கர்நாடகா தலைநகர் பெங்களூரில் வாணவேடிக்கை பட்டாசு என ரசிகர்கள் உற்சாகம் பொங்க கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதேபோல் கர்நாடகா முழுவதும் ரசிகர்கள் இரவு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் ஷிமோகாவில் உள்ள கோபி சர்க்கிளில் கூட்டத்தைக் கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்
கட்டுக்கடங்காத இளைஞர்கள் கூட்டம் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை பைக்கில் இடித்துவிட்டு தப்பியோடினர்.

ஷிமோகா உஷா நர்சிங் ஹோம் வட்டத்திற்கு அருகிலுள்ள ரவீந்திர நகர் கணபதி கோயில் முன் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் வேகமாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த அபிநந்தன் (21) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஜெயநகர் காவல் நிலைய எல்லைக்குள் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.