2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில், முன்னணி வீரர்களைத் தக்கவைக்க ரூ.40 கோடி வரை அணிகள் செலவிட வேண்டிய நிலை ஏற்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்தது இரண்டு முன்னணி வீரர்கள், தங்களைத் தக்கவைக்க அணியின் உரிமையாளர்களிடம் ரூ.40 கோடி கேட்பதாகவும், மேலும் சில வீரர்களும் இதே கோரிக்கையை முன்வைக்க உள்ளதாகவும் Cricbuzz செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது ஐபிஎல் அணிகளின் ஏலத் தொகை ரூ.130 கோடியாக உள்ள நிலையில், 2028 மெகா ஏலத்தின்போது அது ரூ.150 கோடியாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு வீரரைத் தக்கவைக்கவே ரூ.40 கோடி செலவிட்டால், அணியின் மொத்த ஏலத் தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமாகச் செலவாகும்.

இதற்கிடையே, வீரர்களைத் தக்கவைக்கும் முறையையே நீக்கிவிட்டு, ‘ரைட் டு மேட்ச்’ (RTM) முறையை மட்டும் பயன்படுத்தலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீரர்கள் கேட்கும் அதிகப்படியான தொகையைத் தவிர்த்து, ஏலத்தின் மூலம் அவர்களின் உண்மையான சந்தை மதிப்பைத் தீர்மானிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இதனால் ஏலத்தில் வீரர்களுக்கான போட்டி அதிகரித்து விலையும் உயரக்கூடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

ஐபிஎல் அணிகளின் ஏலத் தொகை உயர்வு:

  • 2008 – ரூ.20 கோடி

  • 2014 – ரூ.60 கோடி

  • 2018 – ரூ.80 கோடி

  • 2022 – ரூ.90 கோடி

  • 2025 – ரூ.120 கோடி

  • 2027 – ரூ.130 கோடி

  • 2028 – ரூ.150 கோடியாக உயர வாய்ப்பு

கடந்த மெகா ஏலத்தின்போது, வீரர்களைத் தக்கவைக்க முதல் வீரருக்கு ரூ.18 கோடி, இரண்டாவது வீரருக்கு ரூ.14 கோடி, மூன்றாவது வீரருக்கு ரூ.11 கோடி எனத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 5 வீரர்களைத் தக்கவைத்த அணிகளின் ஏலத் தொகையில் ரூ.75 கோடி கழிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாக வீரர்களுக்கு ஊதியம் வழங்கினாலும், அதற்கான முழுத் தொகையும் அணியின் ஏலக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

2028-ம் ஆண்டு ஏலத்துக்கான விதிகள் மற்றும் வீரர்களைத் தக்கவைக்கும் தொகை குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆலோசனை நடத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.