மும்பை:
மும்பை இந்தியன் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோற்கடித்தது.
ஐபிஎல் தொடரின் 3-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கியது.
இதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.
பிரித்வி ஷா 7 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் இறங்கினார். அவர் 10 பந்துகளில் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இறங்கிய, காலின் ஐங்கிராம் தவானுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் ஒன்று, இரண்டாக சேர்த்தனர். இடையிடையே பவுண்டரிகளாக விளாசினர்.
இதனால் டெல்லி அணியின் ரன் வேகம் அதிகரித்தது. 112 ரன் இருக்கும்போது, ஐங்கிராம் அவுட்டானார். அவர், 32 பந்துகளில் ஒரு சிக்சர், 7 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்தார். அடுத்து ரிஷப் பந்த் இறங்கினார்.
நிதானமாக ஆடிய ஷிகர் தவான் 36 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரியுடன் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய ரிஷப் பந்த் அதிரடியில் இறங்கினார். அவர் சிக்சர், பவுண்டரியாக விளாசினார். அவர் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தினார்.
இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்களை எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் மிட்செல் மெக்லகன் 3 விக்கெட்டும், பாண்ட்யா, பென் கட்டிங், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19.2 ஓவரில் 176 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஐபிஎல் 3வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 37 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி.
அதிக பட்சமாக டி காக் 27 ரன்னும், யுவராஜ் 53 ரன்னும் பாண்டியா 32 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.