பெங்களூரு:
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டி இன்று பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் காரணமாக மும்பை மட்டையுடன் மைதானத்திற்குள் இறங்கியது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டான் டி காக்கும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்த நிலையில், டி காக் 23 ரன்னில் அவுட்டானார். அப்போது அணியின் ரன் 54 ஆக இருந்தது. தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் இணைந்து ஆடிவந்தார்.
ரோகித் நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர், 33 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகள் எடுத்திருந்தார். தொடர்ந்து சூர்யகுமார் 38 ரன்னும், யுவராஜ் சிங் 23 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி ரன்கள் எடுததார். ஆனால், அவர் நின்று விளையாடி ஓவர்கள் இல்லை. ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் 3 சிக்சர்கள், 2பவுண்ட்ரி உள்பட 32 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்துள்ளது.
பெங்களூர் அணி சார்பில் யுவேந்திர சாஹல் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ், மொகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.