மும்பை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விசிறி ஒருவர் நியுஜிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சைமன் டவுலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
நியுஜிலாந்து நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சைமன் டவுல் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனை செய்து வருகிறார். இவருடைய வர்ணனைகளுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அது மட்டுமின்றி இவருடைய வர்ணனியின் போது இவர் மனம் திறந்து கூறும் கருத்துக்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
ஒருவருக்கு ஆதரவு இருப்பது போல எதிர்ப்பு உள்ளதும் சகஜம் தானே. இவருடைய மனம் திறந்த கருத்துக்களால் ஒரு சில வெறி பிடித்த ரசிகர்கள் ஆத்திரம் அடைவதும் உண்டு. அது போல் இப்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் எட்டு அணிகளில் ஆர்சிபி என அழைக்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றாகும். இந்த அணியின் தலைவர் விராட் கோலி ஆவார். இந்த அணியில் அப் டி வில்லியம்ஸ், சாஹல், பார்த்திவ் படேல், உமேஷ் யாதவ் உள்ளிட்ட பல புகழ்பெற்ற வீர்ர்கள் உள்ளனர்.
இந்த அணியின் விசிறி ஒருவரான தர்மிஷ் மூர்த்தி என்பவர் சைமன் டவுலுக்கு சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் சைமன் டவுல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைப் பற்றி தவறாக விமர்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவ்வாறு நிறுத்தவில்லை எனில் சைமன் உயிருக்கு ஆபத்து உண்டாகும் எனவும் மிரட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஸ்கீரின்ஷாட் எடுத்து வெளியிட்ட சைமன் தனது பதிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விசிறி அமைதி அடையும் படிகேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அந்த விசிறி கூறியது சரியாகவும் இருக்கலாம் எனவும் ஆனால் இத்தனை கோபம் அடையும் அளவுக்கு தாம் தவறாக எதையும் பேசியதாக நினைவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வர்ணனையாளராக மாறிய பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சைமன் டவுலை அவருடைய பதிலுக்காக பாராட்டி உள்ளனர்