பெங்களூரு:

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில்  நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி  17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொரின்  42-வது லீக் போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்குட்ம, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நேற்று இரவு நடைபெற்றது.

இந்த போட்டியில் பெங்களூரு அணியில் இருந்து  ஸ்டெயினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு டிம் சவுதி சேர்க்கப்பட்டார். இதே போல் பவான் நெகி நீக்கப்பட்டு இந்த சீசனில் முதல்முறையாக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருந்தார்.

போட்டியின் தொடக்கத்தில், ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் பெங்களூரு மட்டையுடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கோலியும், பார்திவ் பட்டேலும் களமிறங்கினர். ஆர்சிபி  கேப்டன் விராட் கோலி 3 ரன்னில் கேட்ச்சில்  இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய கோலி, 13 ரன்களில், முகமது ஷமி வீசிய ஷாட்பிட்ச் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  மற்றொரு தொடக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 43 ரன்களிலும் (24 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த மொயீன் அலி 4 ரன்னிலும், அக்‌ஷ்தீப் நாத் 3 ரன்னிலும் வெளியேறினர். அப்போது பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 81 ரன்களுடன் திண்டாடியது.

இதையடுத்து களமிறங்கிய டிவில்லியர்சும், மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து நிதானமாகவும், அதே வேளையில் அதிரடியாகவும் பந்தை சுழற்றினர். இதன் காரணமாக அணியின் ரன் மளமளவென எகிறியது. 13.1 ஓவர்களில்  100 ரன்களை கடந்து எகிறியது. முகமது ஷமியின் ஓவரில் டிவில்லியர்ஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி ஆர்சிபி ரசிகர்களின் கரகோஷத்தை தனதாக்கினார்.  வில்ஜோனின் இறுதி ஓவரில் இருவரும் இணைந்து 3 சிக்சர், 2 பவுண்டரி விரட்டி யடித்தனர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் நேற்று சின்னசாமி ஸ்டேடியமே களைகட்டியது…

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 82 ரன்களுடனும் (44 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 46 ரன்களுடனும் (34 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 64 ரன்கள் திரட்டினர். டிவில்லியர்ஸ் தனது 33-வது அரைசதத்தை எடுத்தார்.

பஞ்சாப் அணியின் கேப்டனும்  சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் 4 ஓவரில் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.  முருகன் அஸ்வின், முகமது ஷமி, வில்ஜோன் ஆகியோருக்கும் தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

இதையடுத்து 203 ரன்கள் வெற்றி என்ற இலக்கில் பஞ்சாப் அணி மட்டையுடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய  கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். அவர்  23 ரன்களும் (10 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மயங்க் அகர்வால் 35 ரன்களும், லோகேஷ் ராகுல் 42 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு நிகோலஸ் பூரனும், டேவிட் மில்லரும் சிறிது நேரம் அச்சுறுத்தினர். 17-வது ஓவர் வரை (3 விக்கெட் டுக்கு 167 ரன்) .

இதன் காரணமாக பஞ்சாப் அணி தடுமாறிய நிலையில், பெங்களூரு பவுலர்கள் அபாரமாக பந்துகளை வீசி தொடர்ந்து மேலும், 4 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தின் போக்கையே மாற்றிவினர். இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்கு 185 ரன்களே எடுக்க முடிந்தது.

இதன் காரணமாக, பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 24 ரன்னிலும், பூரன் 46 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

ஆட்ட நாயகனாக டிவில்லியர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.