மார்ச் 28ம் தேதி மியான்மரில் ஏற்பட்ட 7.7 அளவிலான நிலநடுக்கம் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கியதோடு மொட்டை மாடிகளில் இருந்த இன்பினிட்டி நீச்சல் குளங்களில் இருந்து தண்ணீர் அருவி போல் சாலைகளில் கொட்டியது.
தவிர, நகரின் முக்கிய சதுச்சக் மார்க்கெட் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த 30 மாடி அடுக்குமாடி கட்டிடம் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்தது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்த கட்டிடத்தில் 100 பேர் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுவரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 78 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலநடுக்கத்தில் தாய்லாந்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் இந்த ஒரே கட்டிடத்தில் மட்டும் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்த கட்டிடத்தை கட்டி வரும் கட்டுமான நிறுவனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பாங்காக்கின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல முக்கிய கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட இத்தாலியன் – தாய் டெவலப்மென்ட் நிறுவனத்தினுடன் இணைந்து சீனாவின் ரயில்வே நெ. 10 என்ற நிறுவனம் இந்த கட்டுமானப் பணியை மேற்கொண்டது தெரியவந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி 2023 வரை பிரதமராகப் பொறுப்பு வகித்த ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா ஆட்சிக்காலத்தில் கட்டுமானத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, இதில் சீனாவின் ரயில்வே நெ. 10 இந்த கட்டிடத்தை கட்டி வந்தது தெரியவந்துள்ளது.
சீனாவில் பல கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ள இந்த நிறுவனம் முதல் முறையாக சீனாவுக்கு வெளியே மிகப்பெரிய கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருவதாக தனது இணையதளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் விளம்பரப்படுத்தியிருந்தது.
அதில், இந்த 30 மாடி கட்டிடத்தின் ட்ரோன் காட்சிகளும் படமாக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், நிலநடுக்கத்தில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானதை அடுத்து அந்த விளம்பரத்தை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
அதேவேளையில், தரமற்ற முறையில் கட்டப்பட்ட கட்டிடம் குறித்தும் வெளிநாட்டு நிறுவனத்தின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தாய்லாந்து மக்கள் வலியுறுத்தி வருவதை அடுத்து இந்நிறுவனம் மீது விசாரணை துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.