ஆம்ஸ்டர்டம்:

மலேசியா பயணிகள் விமானத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கி வீழ்த்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

2014ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி 298 பயணிகளுடன் சென்ற மலேசியா விமானம் கிழக்கு உக்ரைன் வான்வெளியில் வெடித்து சிதறியது. இதில் அனைவரும் உயிரிழந்தனர். இதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம்.

இச்சம்பவம் தொடர்பாக நெதர்லாந்தை சேர்ந்த விசாரணை அதிகாரி ஃப்ரெட் வெஸ்டர்பேகே தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முன்னேற்றம் குறித்து வெஸ்டர்பேகே இன்று கூறுகையில், ‘‘ரஷ்ய ராணுவத்தின் 53வது படைப்பிரிவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தான் விமானத்தை தாக்கியுள்ளது.

ஆனால், அதை ஏவியவர்கள் யார்? என்பது தெரியவில்லை. இந்த நபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. தகவல்களை அளிக்கவும் இல்லை’’ என்றார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. இந்த புலனாய்வு முடிவு குறித்து கருத்து தெரிவிக்க ரஷ்ய அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. எனினும் இந்த செயலில் ஈடுபட்டிருக்க கூடிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய பட்டியலை விசாரணை அமைப்பு தயாரித்திருந்தது. தற்போது இந்த பட்டியல் சுருக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.