கொல்கத்தா
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பணமதிப்பு இழப்பால் பாலியல் தொழில் குறைந்தது என தெரிவித்துள்ளார். அதற்கு ஒரு பாலியல் தொழிலாளி பதில் அளித்துள்ளார்.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பாலியல் தொழில் வெகுவாக குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி இருந்தார். அது குறித்து கொல்கத்தா சோனாகாசி பகுதியில் உள்ள ஒரு பாலியல் தொழிலாளி ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு
நீங்கள் இந்த தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்?
நான் எனது கிராமத்தில் நான் காதலித்த ஒருவருடன் ஓடி வந்தேன். அவர் என்னை எனது 16ஆவது வயதில் சோனாகாசியில் விற்று விட்டார். தற்போது எனக்கு 30 வயதாகிறது. நான் சாதாரண நாட்களில் ஐந்து முதல் ஆறு பேர் வரை விசேஷ நாட்களில் எட்டு முதல் 10 பேர் வரை வாடிக்கையாளர்கள் வருவார்கள். நான் ஒருவருக்கு ரூ.500 வாங்குகிறேன். எனக்கும் வீட்டு வாடகை, மின்சார செலவும், உள்ளூர் ரவுடிகளுக்கும் தரகர்களுக்கும் மாமூல் என நிறைய செலவு உண்டு
ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு வந்ததினால் உங்களுக்கு பாதிப்பு உண்டா?
எங்கள் தொழில் ரொக்கத்தில் தான் நடக்கிறது. அந்த அறிவிப்புக்குப் பின் எங்கள் தொழிலே முழுவதுமாக நசிந்துப் போனது. எங்களுடைய வாடிக்கையாளர்கள் எங்களுக்கு செல்லாத நோட்டுக்களை தர முயல்வார்கள். நாங்களும் அதைப் பற்றி தெரியாமலே வாங்கிக் கொள்வோம். எங்களுடைய வாடிக்கையாளர்களில் முக்கால் வாசிப் பேர் வருவதை நிறுத்தி விட்டனர். இது ரூ.200 வாங்கும் பெண்ணையும், அதே நேரத்தில் ரூ.3000 வாங்கும் பெண்ணையும் ஒரே நேரத்தில் பாதித்தது. சில பெண்கள் வாடிக்கையாளர்களிடம் திருடக் கூட செய்தனர்.
உங்கள் அனுபவம் என்ன?
முதலில் எனக்கு கஷ்டமில்லை. என்னிடம் ரூ.8000 இருந்தது, அதில்ரூ,1000 நோட்டுக்கள் நான்கும், இரண்டு 500 ரூ. நோட்டுக்களும் இருந்தன. அதை மாற்றிக் கொடுக்க என்னிடம் இருந்து ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ.400 கமிஷன் கொடுன்க்க வேண்டியிருந்தது. எனது குடும்பச் செலவு வேறு. ஒரு மாதத்தில் என்னிடம் ஒரு பைசா கூட இல்லை. நான் எனது நகைகளை விற்க முயன்றேன். வாங்க ஆளில்லை. நான் வீட்டு வாடகை தர முடியாமலும், எனது மகனின் பள்ளிக் கட்டணம் செலுத்த இயலாமலும் மிகவும் திண்டாடித்தான் போனேன்.
அரசு பாலியல் தொழில் குறைந்தது பணமதிப்பு இழப்புக்கு ஒரு வெற்றி என சொல்கிறதே?
அவர்கள் யார் நல்லது கெட்டதை சொல்ல? எங்களின் வயிற்றில் அடித்தது இந்த நடவடிக்கை. நாங்களும் மனிதர்களே. அரசியல்வாதிகள் அலுவலகத்தில் உட்கார்ந்துக் கொண்டு எதுவும் சொல்லலாம்.
உங்கள் எதிர்காலம் எவ்வாறு உள்ளது?
என் எதிர்காலாம் ஒரே இருட்டாகத்தான் உள்ளது. என்னால் இந்த தொழிலை விட்டு வெளியே வர முடியது. இந்த சோனாகாசியில் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன மாறுதல் நிகழ்ந்துள்ளது? பெண்களின் விற்பனை குறைந்துள்ளதா? அப்படி ஒன்றும் நடக்கவில்லை. வீணே முட்டாள் கனவை காண வேண்டாம்
இவ்வாறு அந்தப் பேட்டியில் அந்தப் பெண் கூறி உள்ளார்.