மதுரை: அரசுக் கல்லூரிகளில் கவுரவ உதவியாளர்களை உதவி பேராசிரியர்கள் நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்காசி வாசுதேவநல்லூரைச் சேர்ந்த பாண்டியம்மாள், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்க தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், அரசு கலைக் கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 4.10.2019-ல் அறிவிப்பு வெளியானது. தனியார் கல்லூரியில் உதவி பேராசிரிய ராக பணிபுரிந்து வரும் நான் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். ஆனால், தற்போது, அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர் களை உதவி போராசிரியர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளனர். உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே நிரப்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு விதியில் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் என் கோரிக்கையை அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அரசு கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்காக பணிபுரிந்து வருவோர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.