இங்கிலாந்து மன்னராக தனது 73 வது வயதில் பொறுப்பேற்றுள்ள சார்லஸ் III 1948 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதி பிறந்தார்.
1952 ம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக இருந்த ஜார்ஜ் VI மறைவுக்குப் பிறகு அவரது மூத்த மகள் எலிசபெத் ராணியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
எலிசபெத், மகாராணியாக முடிசூட்டிக் கொண்டபோது 3 வயதே நிரம்பிய அவரது மூத்த மகன் சார்லஸ் பட்டத்து இளவரசராக அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விவரம் தெரியாத குழந்தையாக இருந்தபோதே பட்டத்து இளவரசராக வலம்வந்த சார்லஸ் பின்னாளில் அவரது சாதனைகளுக்காகவும் சறுக்கல்களுக்காகவும் பேசப்பட்டார்.
2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது தந்தை பிரின்ஸ் பிலிப் மரணத்தை அடுத்து தற்போது தாய் ராணி எலிசபெத்தையும் இழந்துள்ள சார்லஸ் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இளவரசராக இருந்துவந்தார்.
பக்கிங்காம் அரண்மனையில் பாலபாடம் படித்த இளவரசர் சார்லஸ் பின்னர் லண்டன், ஹாம்ப்ஷயர் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கல்வியைத் தொடர்ந்தார்.
1967 ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் மற்றும் மானுடவியல் பாடப் பிரிவில் பட்டம் பயின்ற இவர் இரண்டாம் ஆண்டு பட்டம் பயின்றபோதே ராயல் ஏர் போர்ஸில் விமான ஓட்டியாக பயிற்சி பெற்றார்.
1970 ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த இவருக்கு அதற்கு முன்னதாக 1969 ம் ஆண்டு வேல்ஸ் இளவரசராக பட்டம் சூட்டடினார் ராணி எலிசபெத்.
இதனைத் தொடர்ந்து, 1970 பிப்ரவரி 11 ம் தேதி பிரபுக்கள் சபையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்கனவே பைலட்டாக பயிற்சி பெற்றிருந்த சார்லஸ் 1971 ம் ஆண்டில் ஜெட் விமான பைலட்டாகவும் ராயல் நேவி-யின் போர்கப்பலைகளை இயக்கவும் கற்றுக்கொண்டார். 1974 ல் ஹெலிகாப்டரையும் ஓட்ட கற்றுக்கொண்ட அவர் கப்பல்படையின் விமானங்களை இயக்கி வந்தார்.
1994 ம் ஆண்டு ஓர் விமான விபத்து நிகழும் வரை கப்பல்படை விமானங்களை தொடர்ந்து இயக்கி வந்தார் சார்லஸ்.
1981 ம் ஆண்டு டயானாவை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 1982 ம் ஆண்டு வில்லியம் என்ற மகனும் 1984 ம் ஆண்டு ஹென்றி (ஹாரி) என்ற மகனும் பிறந்தனர்.
தன்னை விட 13 வயது இளையவரான டயானாவுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர்.
கமீலா-வுக்கு துரோகம் இழைத்ததாக இளவரசர் சார்லஸ் வெளிப்படையாக கூறியதை அடுத்து தங்களது திருமண பந்தம் முறிந்து விட்டதாக டயானா மற்றும் சார்லஸ் இருவரும் கூட்டாக அறிவித்தனர்.
1996 ம் ஆண்டு விவாகரத்து பெற்ற டயானா அடுத்த ஆண்டே பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கார் விபத்தில் கொல்லப்பட்டார்.
டயானா மறைந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2005 ம் ஆண்டு கமீலாவை திருமணம் செய்து கொண்டார் சார்லஸ்.
தற்போது மன்னராக பொறுப்பேற்றுள்ள சார்லஸ் மனைவியான கமீலாவுக்கு டயானாவுக்கு இருந்தது போல் மக்கள் செல்வாக்கு இல்லை என்பதால் ராணியாக பட்டம் ஏற்றுக்கொள்ளாமல் மன்னரின் துணைவியாக ராணிக்குரிய அந்தஸ்த்துடன் கார்ன்வெல் கோமகளாக வலம்வருவார் என்று ராணி எலிசபெத் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
கடந்த 70 ஆண்டுகளாக ராணி எலிசபெத் சார்பாக முதலீட்டை நிர்வகிப்பது, வெளிநாட்டு பிரமுகர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வது, முக்கியமான தேசிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது, பிரிட்டன் சார்பாக வெளிநாடுகளுக்குச் செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
மகாராணி எலிசபெத் மறைவுக்குப் பிறகு நிலம் மற்றும் சொத்துக்களை பராமரிப்பாதுடன் காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் பதவிவகிக்க இருக்கும் இவருக்கு பிரிட்டனின் இறையாண்மையைக் காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது.