டோக்கியோ:
எந்திரங்களை படைப்பது மனிதன் தான். ஆனால் அந்த மனித இனத்திற்கே இழப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் எந்திரங்கள் மாறி வருகிறது. மனிதர்கள் 10 பேர் சேர்ந்த செய்ய வேண்டிய ஒரு வேலையை ஒரு எந்திரம் செய்துவிடும் என்று நாம் பேசுவது உண்டு. ஆம்.. இது ஜப்பானில் இப்போது உண்மையாகிவிட்டது.
அங்குள்ள ஃபுகோகு மியுசுவல் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பாலிசிதாரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியில் 34 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணங்களை சரிபார்ப்பது, மருத்துவ சான்றிதழ்களை சரிபார்ப்பது, பண பட்டுவாடா போன்ற பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பணிக்கு தற்போது செயற்கை நுண்ணறிவு முறை பயன்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதாவது இது ஒரு ரோபோ போன்றது. 34 பணியாளர்கள் செய்து கொண்டிருந்த பணியை இந்த ஒரு ரோபோ செய்து முடித்துவிடுகிறது.
ரஜினி நடித்த எந்திரன் படத்தில் ஐஸ்வர்யாராய் தேர்வு எழுத உதவி செய்வதற்காக எப்படி பெரிய பெரிய புத்தகங்களை ஒரு விநாடிகளில் எந்திரன் ரஜினி படித்து முடிக்குமோ..
அதேபோல் பாலிசிதாரர்கள் சமர்ப்பிக்கும் ஆயிரகணக்கான மருத்துவ அறிக்கைகளை நொடியில் படித்து முடித்துவிடுகிறது. சிகிச்சை முறை, மருத்துவமனை தங்குதல், அறுவை சிகிச்சை நடைமுறை, காப்பீட்டு தொகை கணக்கீடு செய்தல் போன்றவற்றை உடனடியாக கணக்கு போட்டுவிடுகிறது.
ஐபிஎம்.ன் வாட்சன் எக்ஸ்ப்லோரர் என்ற தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோ மனித மூளையை போல் சிந்திக்கும் ஆற்றல் கொண்டது.
இதை பயன்படுத்தியதன் மூலம் வர்த்தகம் அதிகரித்திருப்பதோடு, அடக்க செலவும் குறைந்துள்ளது. இதனால் அந்த நிறுவனம் பல மடங்கு லாபத்தை ஈட்டி வருகிறது. ஊதியம், போனஸ், அலவன்ஸ், உணவு மற்றும் தேனீர் இடைவேளை, விடுமுறை என்று எந்த பிரச்னையும் இல்லாமல் இந்த ரோபோ வேலை செய்வதால் ஜப்பான் தொழில் நிறுவனங்கள் மத்தியில் பெரும் வரவேற்பபை பெற்றுள்ளது.
இந்த பணியில் ஈடுபட்டிருந்த 34 பணியாளர்களை வரும் மார்ச் 31ம் தேதியோடு கணக்கு முடித்து வீட்டுக்கு அனுப்ப அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜப்பானில் ஜனத்தொகை குறைவு. அங்கு மூத்த குடிமக்கள் தான் அதிகம். அதனால் இந்த திட்டம் அங்கு அவசியமாகிறது. ஜப்பானை தொடர்ந்து நம் நாட்டிற்கும் இந்த திட்டம் வந்தால் என்ன ஆகும் என பலருக்கும் கிலி ஏற்பட்டுள்ளது.