டில்லி:
‘‘டில்லி முதல்வர் உங்களது கட்சியை சேர்ந்தவர் இல்லை என்பதற்காக அவரை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சிப்பது சரியல்ல’’ என்று பாஜக எம்எல்ஏ, கவுன்சிலரை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டில்லி ஷாதாரா பகுதியில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். இதை பாஜக எம்எல்ஏ ஓம் பிரகாஷ், கவுன்சிலர் குஞ்சன் குப்தா ஆகியோர் தடுத்ததாக கூறப்பட்டது. அப்போது நடந்த போராட்டத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவமதிக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி லோகூர் முன்னிலையில் நடந்தது. இது தொடர்பான வீடியோவை பார்த்த நீதிபதி அதிகாரிகளை அவர்கள் தடுக்கவில்லை என்பது உறுதியானது. இதைதொடர்ந்து நீதிபதி கூறுகையில், ‘‘நீங்கள் அதிகாரிகளை தடுக்கவில்லை என்பது ஏற்கப்படுகிறது. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொடியை ஏந்திக் கொண்டு டில்லி முதல்வரை அவமதிக்கும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.
முதல்வர் என்பவர் பொறுப்புள்ள ஒரு நபர். அது டில்லி அல்ல எந்த மாநிலமாக இருந்தாலும் பொருந்தும். ஒரு விஷயத்தை தெரியபடுத்த வேண்டும் என்றால் நீங்கள் எது வேண்டுமானாலும் செய்வீர்கள் என்பது தெளிவாகிறது. நீங்கள் இந்த அமைப்பை அழிக்கிறீர்கள்’’ என்றார்.
மேலும், நீதிபதி கூறுகையில், ‘‘இன்று தரக்குறைவான வார்த்தைகள் முதல்வருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. நாளை பிரதமருக்கு எதிராக இதை பயன்படுத்துவீர்கள். உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என்பதற்காக பிரதமரையோ அல்லது முதல்வரையோ அவமதிக்க கூடாது. அவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
முன்னதாக பிப்ரவரி 10ம் தேதி இந்த இருவருக்கும் எதிராக டில்லி போலீசார் நடவடிக்கை எடுக்க நீதிபதி கண்டன நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராயினர். நோட்டீஸை விளக்கி கொண்ட நீதிபதி இத்தகைய கருத்துக்களை தெரிவித்தார்.