செருப்பு போடமாட்டேன் என்று சபதமெடுப்பதற்கு பதிலாக தேசத்திற்கும் சமூகத்திற்கும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சமீபத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை காலில் செருப்பு அணியப்போவதில்லை என்று சபதம் செய்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த வாரம் தமிழ்நாடு மாநில தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
அதேவேளையில், 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது எக்ஸ்பிரஸ் வேகத்தில் அண்ணாமலையுடன் உரசலில் இருந்த நயினார் நாகேந்திரனுக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.
கடந்த வாரம் நயினார் நாகேந்திரன் தனது பதவியேற்பு நிகழ்ச்சியின் போது அண்ணாமலையின் காலுக்கு பொருத்தமான காலணியைக் கொடுத்து அணியச் செய்து அவரை அப்பதவியில் இருந்து வழி அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தொண்டரும் மோடி அபிமானியுமான ராம்பால் காஷ்யப் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக செருப்பு அணியாமல் இருப்பதை கேள்விப்பட்டு பிரதமர் மோடி அவருக்கு காலணி வாங்கி தந்துள்ளார்.
திங்கட்கிழமை ஹரியானாவில் உள்ள யமுனாநகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது நீண்டகால ரசிகரை சந்தித்து அவருக்கு காலணி வழங்கியதோடு அவரை அழைத்து அவருடன் கலந்துரையாடினார்.
மோடி பிரதமராக வேண்டும் என்றும் பிரதமராக மோடியை சந்தித்த பிறகே காலில் செருப்பு அணிவேன் என்றும் அவர் சபதமெடுத்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து பிரதமருக்கு இப்போது தெரியவந்ததை அடுத்து அவருக்கு காலணி வாங்கிக்கொடுத்து அணியச் செய்த மோடி, “ராம்பால் போன்றவர்களின் அன்புக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
“ராம்பால் போன்றவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். இருப்பினும், அத்தகைய உறுதிமொழியை எடுப்பதற்கு பதிலாக, சமூகப் பணி மற்றும் தேசக் கட்டுமானம் தொடர்பான பணிகளைச் செய்ய உறுதிமொழி எடுக்குமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் “எதிர்காலத்தில் இதுபோன்ற சபதங்களைச் செய்யாதீர்கள்” என்று அறிவுறுத்தியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.