விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ வழங்கப்படமாட்டாது என்று கொரியன் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.
மோசமான வானிலையில் விமானம் குலுங்கும் போது சூடான தண்ணீர் போன்ற திரவம் மேலே சிந்துவதால் ஏற்படும் காயத்தை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சியோலை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொரியன் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக நடுவானில் குலுங்கியது இதில் ஒருவர் உயிரிழந்தார் பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
கப் நூடுல்ஸ் தவிர கொதிக்கும் நீரில் தயாரிக்கப்படும் ‘ஷின் ரம்யுன்’ என்ற ஒருவகை நூடுல்ஸ் உணவும் ஆகஸ்ட் 15 முதல் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
இருந்தபோதும் இந்த தடை எகானமி வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் முதல் மற்றும் பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கு இது பொருந்தாது என்றும் கூறியுள்ளது.
பல்வேறு காரணங்களால் விமானம் குலுங்கும் போது காபி உள்ளிட்ட சூடான திரவ உணவுகள் பயணிகளின் மீது சிந்துவதும் அதற்காக சிலர் விமான நிறுவனங்களின் மீது குற்றம் சொல்வதும் அடிக்கடி நடக்க கூடிய ஒன்று என்ற போதும் குறிப்பிட்ட சில உணவு வகைகளை ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டும் தடை விதித்திருப்பது பயணிகளிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.