இந்தியாவை போன்று பாகிஸ்தானும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக முன்னாள் வீரர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் யு-19 கிரிக்கெட் அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சி அளிப்பது போன்று தாங்களும் அவ்வாறு செய்ய முடிவெடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

dravid

தற்போது சர்வதேச அளவில் விளையாடி வரும் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, ராகுல் டிராவிட் தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட யு-19 இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு உலக கோப்பையை பெற்றது. அதுமட்டுமின்றி. சிறந்த வீரர்களை உருவாக்குவதில் ராகுல் டிராவிட்டின் பங்கு அளப்பறியதாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு முன்னாள் சிறந்த வீரர்கள் மூலம் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டை சேர்ந்த இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்களை சிறப்பாக வழிநடத்திடவும் முன்னாள் கேப்டன் யூனிஸ் கானை பயிற்சியாளராக நியமிக்க ஆலோசனை நடத்தி வருகிறது. ஏனெனில் தற்போது உலக கோப்பை போட்டிகள் நெருங்க உள்ளதால் பாகிஸ்தானை அணியை பலமிக்க அணியாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தானின் யு-19 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், அதன் மேனேஜராகவும் நியமிக்க முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஓய்வில் இருக்கும் யூனிஸ் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரராகவும், முதலில் 10,000 ரன்களை கடந்த வீரராகவும் உள்ளார். அதன் காரணமாக அவர் இளம் வீரர்களுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் வீரர்களை தயார்படுத்துவதில் வெற்றியடையலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறி வருகிறது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் கூறுகையில், “ ஆஸ்திரேலியா ரோட்னி மார்ஷ், ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டவர்களையும், இந்தியா டிராவிட் உள்ளிட்ட தலை சிறந்த வீரர்களை கொண்டு இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதன் முடிவுகள் நன்றாக உள்ளது. அவர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர்” என தெரிவித்தார்.

மேலும், ”நமது வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் கல்வியும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நமது முன்னாள் வீரர்களுடன் வெளிநாட்டு பயிற்சியாளர்களும் இணைந்து இளம் தலைமுறையினருக்கு இந்தியாவை போன்று பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளோம். இதில் இந்தியாவிடம் இருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம்” எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, இளம் வீரர்களுக்கு பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் முகமது யூனிஸை நியமிக்கவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.