சென்னை,
தமிழக முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் ஆலோசகராகவும், தமிழக முன்னாள் தலைமை செயலாளராகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இன்று இரண்டாவது முறையாக ஆஜரானார்.
அவரிடம் விசாரணை ஆணைய நீதிபதி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரை விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 20ந்தேதி ஷீலா பாலகிருஷ்ணன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதன்பின்னல் பல மருத்துவர்கள் மற்றும் பலரிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, ஷீலா பாலகிருஷ்ணன் மீண்டும் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது.
அதைத்தொடர்ந்து இன்று மீண்டும் ஷீலா பாலகிருஷ்ணன் விசாரணை ஆணையத்தில் ஆஜனார்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அப்போது விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி, ஷீலாவிடம் பல கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
ஷீலா பாலகிருஷ்ணன் ஜெ.வின் ஆலோசகராகவும், முன்னாள் தலைமை செயலாளராகவும் இருந்த நிலையில், ஜெ.குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதி கேட்டதாக கூறப்படுகிறது.
உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அங்கிருந்தபடியே அரசு கோப்புகளை பார்த்தாரா? அதிகாரிகளுடன் கலந்துரையாடினாரா என்றும் ஏதேனும் கோப்புகளில் கையெழுத்திட்டாரா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை, அவர் மருத்துவமனையில் வெளியானபோது அரசு சார்பில் வெளியான தகவல்களை கொண்டு அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை ஆணைய நீதிபதி கிருஷ்ணசாமி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.