கொழும்பு
இந்திய ரூபாயை இலங்கை உள்நாட்டுப் பரிவத்தனைக்குப் பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இலங்கையில் இந்திய ரூபாயை பொதுப் பணமாகப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். பிறகு அரசு முறை பயணமாக இந்தியா வந்த ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த பயணத்தின்போது இருநாடுகளுக்கு இடையில் கையெழுத்தாகின. ரணில் விக்ரமசிங்கேவின் இந்தியப் பயணத்துக்குப் பிறகு, இலங்கையில் அமெரிக்க டாலர், சீனாவின் யென் ஆகியவற்றைப் போல இந்திய ரூபாயையும் உள்ளூர் பரிமாற்றத்துக்கு அனுமதிப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்தது.
ஆயினும் அது குறித்து முறையாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இலங்கையில் இந்திய ரூபாயின் பயன்பாடு குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாகத் தெரிகிறது. எனவே இது தொடர்பாக இலங்கையின் மத்திய வங்கி நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையில்
“இலங்கையில் இந்திய ரூபாய் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணமாக இருந்தாலும் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு அது செல்லுபடியாகாது. இது தொடர்பாகப் பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்”
என்று கூறப்பட்டுள்ளது.