உக்ரைன் எல்லையை ஒட்டிய போலந்தின் பிரஸிஒடோவ் என்ற கிராமத்தில் விழுந்த ஏவுகணையால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து பரபரப்படைந்த போலந்து உடனடியாக ரஷ்ய தூதரை அழைத்து இதுகுறித்து விளக்கம் கேட்டது.
அதேவேளையில், போலந்து மீது ரஷ்யா ஏவுகணை வீசியதில் இரண்டு பேர் பலியானதாக செய்தி பரவியது.
இது ரஷ்யாவை ஆத்திரமூட்டும் செயல் என்றும் தங்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்றும் ரஷ்யா எச்சரித்தது.
இதனை அடுத்து ஜி-20க்களின் கூட்டத்தை ஓரம்கட்டிவிட்டு G7 மற்றும் நேட்டோ தலைவர்களுடன் பேச்சு நடத்தினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
பின்னர், இது தொடர்பான விசாரணைக்கு அமெரிக்க படையினர் போலந்துக்கு உதவி செய்வார்கள் என்று பைடன் அறிவித்தார்.
இந்த நிலையில் ஏவுகணை வீசப்பட்ட பகுதிக்கு சென்று நேரடியாக நடத்திய ஆய்வில் இந்த ஏவுகணை வந்த திசை மற்றும் விழுந்த இடம் மற்றும் நிலை ஆகியவற்றை வைத்து இது உக்ரைனில் இருந்து விழுந்திருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து ஏவுகணைகள் வீசப்படுவதும் அதனை சமாளிக்க உக்ரைனில் இருந்து ஏவுகணை வீசப்படுவதும் கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இவ்விரு நாடுகள் பயன்படுத்தும் ஆயுதங்களில் பெரும்பாலானவை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.