பெங்களூரு,
பிரபல மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாருக்கு நிறுவனத் தலைவர் நந்தன் நிலகனி பதில் அளித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் ஊழியர்களில் பெயர் தெரிவிக்காத சிலர் அளித்த புகாரில் நிறுவனத்தின் தலைமை அலுவலர் சலில் பரேக் மற்றும் நிர்வாக அலுவலர் நிலஞ்சன் ராய் ஆகியோர் நிறுவன லாபத்தை அதிகமாகக் காட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நாட்டில் கடந்த 2 தினங்களாக கடும்சர்சை எழுந்துள்ளது.
இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தலைவர் நந்தன் நிலகனி அளித்துள்ள அறிக்கையில் ”எங்களது இன்ஃபோசிஸ் இயக்குநர் குழு உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு புகார்கள் வந்தன. அவற்றில் ஒரு புகார் செப்டம்பர் 20, 2019 அன்று “Disturbing unethical practices” என்கிற பெயரிலும் மற்றொரு புகார் கடந்த செப்டம்பர் 30, 2019 அன்று “Whistleblower Complaint” என்கிற பெயரிலும் வந்துள்ளது.
எங்களது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகளை, துணிந்து வெளியிடுபவர்களை பாதுகாக்கும் Whistle blower வழக்கப் படி, இந்த புகார், கடந்த அக்டோபர் 10, 2019 அன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆடிட் கமிட்டியிடமும், அக்டோபர் 11, 2019 அன்று நான் எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினர்கள் முன்பும் சமர்பித்துள்ளோம்்
அந்த தேதி குறிப்பிடாத புகாரில், முதன்மைச் செயல் அதிகாரி சலீல் பரேக் மேற்கொண்ட சர்வதேச பயணங்களில் செய்த முறைகேடுகள் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் அக்டோபர் 03, 2019 தேதி இட்ட புகார் ஒன்று, அமெரிக்காவில் இருக்கும் Whistleblower protection program அலுவலகத்துக்கு கடிதம் சென்று இருப்பதும் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு, கடந்த அக்டோபர் 16, 2019 அன்று தெரிய வந்த போதிலும் எங்களுக்கு வந்த புகார் கடிதங்களுடன் எந்த ஒரு மெயில் அல்லது வாய்ஸ் ரெக்கார்டிங் புகார்களும் கிடைக்கவில்லை.
ஆயினும் இந்த புகாரை முழுமையாக விசாரிக்க உள்ளோம். அத்துடன் இந்த விசாரணை முழுமையாகவும், சுதந்திரமாகவும் நடக்க, இந்த புகார் குறித்த விசாரணையில் இருந்து சலீல் மற்றும் நிலஞ்சன் தலையிட மாட்டார்கள்
இந்த புகாரைத் தொடர்ந்து அக்டோபர் 11, 2019 அன்றே Ernst & Young நிறுவன ஆடிட்டர்களிடம் ஆலோசனை கேட்கத் தொடங்கி உள்ளோம்.. அது மட்டுமின்றி கடந்த அக்டோபர் 21, 2019 அன்று, ஒரு தனி விசாரணையை நடத்த Shardul Amarchand Mangaldas & Co. நிறுவனத்தையும் பணியில் அமர்த்தி இருக்கிறோம். இவ்விசாரணைகளுக்குப் பின் கிடைக்கும் விவரங்களை வைத்து எங்கள் ஆடிட் கமிட்டி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்
கடந்த அக்டோபர் 11, 2019 அன்று இந்த புகார் குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஸ்டாச்சுட்டரி ஆடிட்டராக இருக்கும் Deloitte இந்தியா நிறுவனத்துக்கும் முழுமையாக தெரியப்படுத்தி உள்ளோம். இந்த விசாரணை முழுவீச்சில் போய்க் கொண்டிருப்பதால் மேற்கொண்டு எந்த கருத்தும் சொல்ல முடியாத நிலை உள்ளதால் கூடிய விரைவில் விசாரணை குறித்த விவரங்களை வெளியிடுகிறோம்.
எங்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு, எப்போதும் உயர்ந்த கார்ப்பரேட் நிர்வாக மேலாண்மையைக் கடைப்பிடிக்கும். அனைத்து பங்குதாரர்களையும் பாதுகாக்கும் என உறுதி அளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.