இறுதி கட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட, 57 வயதான டேவிட் பென்னெட் என்ற மனிதருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக மாற்றியுள்ளனர்.
உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி அந்நாட்டு இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை செய்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேவேளையில், 25 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் தானி ராம் பரூவா 32 வயதான ஒரு நபருக்கு பன்றியின் இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பொருத்தி அறுவை சிகிச்சை செய்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
1997 ம் ஆண்டு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் தானி ராம் பரூவா, ஹாங்காங்-கைச் சேர்ந்த டாக்டர் ஜோனதன் ஹோ கே-ஷிங் என்பவருடன் இணைந்து கூட்டாக இந்த இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
மாற்று இருதயம் மற்றும் நுரையீரல் பொருத்தப்பட்ட நபர் ஒரு வாரம் கழித்து நோயெதிர்ப்பு சக்தி குறைபாட்டால் இறந்து போனார்.
இதனைத் தொடர்ந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனுமதி இல்லாமல் இயங்கியதாக சோனாபூரில் உள்ள டாக்டர் தானி ராம் பரூவா-வின் தானி ராம் பருவா ஹார்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் அப்ளைடு ஹியூமன் ஜெனடிக் இன்ஜினியரிங் நிறுவனம் என்ற பெயரில் இயங்கி வந்த மருத்துவமனை மூடப்பட்டதுடன் டாக்டர் தானி ராமும் கைது செய்யப்பட்டார்.
40 நாள் சிறைவாசத்திற்குப் பின் வெளியில் வந்த டாக்டர் தானி ராமின் மருத்துவமனை இருந்த இடம் தெரியாமல் போனது. அதற்காக மனம் தளராமல் தனது ஆராய்ச்சியைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்திவந்தார் தானி ராம்.
2015 ம் ஆண்டு எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாகக் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய டாக்டர் தானி ராம், கடந்த எட்டு ஆண்டுகளில் 86 பேரை குணப்படுத்தியுள்ளதாக கூறுவதோடு, இதனை அங்கீகரிக்க வேண்டி உலக சுகாதார அமைப்பிற்கும் விண்ணப்பித்துள்ளார்.