சென்னை

போரூர் அருகே நடந்த மெட்ரோ ரயில் கட்டுமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பூந்தமல்லியில் இருந்து பரங்கிமலை வரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில் போரூரில் இருந்து நந்தம்பாக்கம் பகுதி வரை ரயில்வே பாலத்தின் கீழ் 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதையொட்டி 2 தூண்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்ஃபுள்ள சுமார் 40 அடி நீளமுள்ள ராட்சத ‘கர்டர்’ நேற்று இரவு திடீரென சரிந்து கீழே மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் விழுந்தது.

பரங்கிமலையில் இருந்து போரூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது விழுந்ததால் ராட்சத ‘கர்டர்’ அடியில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். எனவே அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த நந்தம்பாக்கம் போலீசார், பரங்கிமலை போக்குவரத்து போலீசார், மெட்ரோ ரயில்வே பணி அதிகாரிகள் விரைந்து வந்து சாலை முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்தனர்.

கீழே விழுந்த 2 ராட்சத ‘கர்டர்’களை ராட்சத கிரேன் மூலம் அகற்றும் பணிகள் முடிந்த பின்னர் பாலத்தின் அடியில் சிக்கியவரின் உடல் மீட்கப்பட்டுஅதன்பிறகே அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.