டில்லி
ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களைப் பல தொழிலகங்கள் உணவு மற்றும் விமான டிக்கட்டுடன் திரும்ப அழைத்து வருகின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. அதன் பிறகும் கொரோனா கட்டுக்குள் வராததால் மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டு தற்போதைய ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் பணி இழந்து சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.
மேலும் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் பலர் நடந்தே சொந்த ஊருக்குச் செல்ல ஆரம்பித்தனர். இதையொட்டி மரண நிகழ்வுகளும் நடந்தன. அதன்பிறகு இந்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்கி அதன்மூலம் ஏராளமானோர் சொந்த ஊருக்குச் சென்றனர். தற்போது அவர்கள் அனைவரும் சொந்த ஊரில் பணி இன்றி உள்ளனர். இவர்களுக்காக 100 நாட்கள் வேலை திட்டத்தில் அதிகம் பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பல தொழிலகங்கள் தற்போதைய ஊரடங்கு விதி தளர்வு காரணமாக பணிகளைத் தொடங்கி உள்ளன. இவற்றில் பணி புரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர் சொந்த ஊருக்குச் சென்றுள்ளதால் பணி புரிய போதுமான ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை மீண்டும் பணிக்கு அழைத்து வரும் முயற்சியில் தொழிலகங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அவ்வகையில் பல நிறுவனங்கள் மீண்டும் பணிக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வசதி, விமான டிக்கட் ஆகியவை அளிக்க முன் வந்துள்ளன. இது குறித்து லினோக்ஸ் குழுவைச் சேர்ந்த இந்திய மேலாளர் வேணுகோபால், “தற்போது பணிக்கு ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவு, விமான டிக்கட் ஆகிய சலுகைகளை அளித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.