மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கலானி நகரில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று மக்கள் மீது மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் காவல் துணை ஆணையர் கிருஷ்ணா லால்சந்தானி தெரிவித்தார்.

‘இந்தச் சம்பவம் திங்கள்கிழமை இரவு நடந்தது. குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் ராமச்சந்திரா நகர் அருகே முதலில் இரண்டு பைக்குகளை மோதினார். பின்னர் படா கணபதி பகுதியில் விபத்து ஏற்படுத்தினார்’ என்று சம்பவம் குறித்து அவர் விளக்கினார்.

இந்த சம்பவத்தில் சுமார் 10 வாகனங்கள் சேதமடைந்தன. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், பலர் படுகாயமடைந்தனர் என்று கூறப்படுகிறது.

விபத்து நடந்த உடனேயே லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு மல்ஹர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

லாரி மோதியதில் உடல்கள் நசுங்கி சாலையில் சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை உள்ளூர்வாசிகள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்தில் தொடர்புடைய லாரி தீப்பிடித்ததை அடுத்து கோபமடைந்த உள்ளூர்வாசிகள் லாரிக்கு தீ வைத்ததாகத் தகவல் பரவியது. இருப்பினும், இந்த செய்திகளை மறுத்த உள்ளூர்வாசிகள் லாரியின் அடியில் சிக்கிய பைக்கின் பெட்ரோல் டாங்க் வெடித்ததில் தீப்பிடித்ததாகக் கூறினர்.

இதற்கிடையில், தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.