நாகர்கோவில்: எல்லை தாண்டியதாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இந்தோனேசியா கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இலங்கை கடற்படையினர்தான் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்து வந்த நிலையில், இப்போது இந்தோனேசிய கடற்படையும் கைது செய்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், ஆழ்கடலுக்கு சென்று வாரக்கணக்கில் தங்கியிருந்து மீன்பிடித்து வருவது வழக்கமான நடைமுறை. குமரியில் இருந்து சுமார்,   50 முதல் 60 நாட்டிக்கல் மைல் தூரம் வரை சென்று அந்தமான் நிக்கோபார் தீவு வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, குமரி மாவட்ட மீனவர்கள்  அண்டை மாநிலங்களைச் சேர்ந்த, கொச்சி, கேரள துறைமுகங்களையும், மகாராஷ்டிரா , அந்தமான் உள்ளிட்ட துறைமுகங்களையும்  தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர்   அந்தமானை  ஒட்டிய ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த   இந்தோனேசிய கடற்படையினர், அவர்கள் மீன்பிடிக்கும் பகுதி,  தங்கள் நாட்டு  கடல் எல்லை என கூறி, எல்லை மீறி வந்ததாக அவர்களை கைது செய்துள்ளதுடன்,  அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து, தமிழக மீனவர்கள் அந்நாட்டு நீதிமன்றத்தில்  அவர்களை ஆஜர்படுத்தியுள்ளனர். இதனையடுத்து  மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குமரி மாவட்ட மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.