இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தெரிகிறது.
இந்தோனேசியாவின் அசெக் மாகாணத்தில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவானது.
இந்த நில நடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, அசெக் மாகாண அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு வெளியே உறங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, பந்தா அசெக் மாகாணத்தின் மேற்கு கடற்கரையை ஒட்டிய சுமத்ரா பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுனாமி உருவானது. இதனால் அசெ மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த சுனாமியால் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்த 2,26,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.