சியாட்டில்
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா நடத்தும் தடுப்பு மருந்து சோதனையில் இந்திய நார்வே கூட்டமைப்பு பங்கு பெற்றுள்ளது.
சீனாவில் வுகான் பகுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் பரவி உள்ளது. மொத்தம் சுமார் 5800 பேர் உயிரை பலி வாங்கிய இந்த வைரஸ் தொற்றால் சுமார் 1.5 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை இந்த நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.
அமெரிக்காவில் மட்டும் நேற்று காலை வரை 2800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 58 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் உள்ள கைசர் பர்மனண்ட் என்னும் நிறுவனம் ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இதற்கு இந்திய நார்வே கூட்டமைப்பு உதவி செய்துள்ளது.
நேற்று ஊசி மூலம் இந்த மருந்து 43 வயதான இரு குழந்தைகளின் தாயான ஒரு பெண்ணுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் மேலும் 45 பேர் பங்கு கொள்ள உள்ளனர். அவர்களில் இந்திய நார்வே கூட்டமைப்பில் உள்ளவர்களும் உதவி செய்ய உள்ளனர். இந்த சோதனை 18 முதல் 55 வயது ஆனவர்களுக்கு சுமார் 6 வாரங்கள் நடைபெற உள்ளது.