டில்லி:
டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில இருந்து இண்டிகோ விமானம் 177 பயணிகளுடன் நேற்று மாலை 6.30 மணிக்கு கவுகாத்தி நோக்கி புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் விமானம் புறப்பட்டு செல்ல அனுமதி கிடைக்கவில்லை.
வானிலை மேலும் மோசமடைந்ததால் அனுமதி கிடைக்காததால் பயணிகள் எரிச்சலடைந்தனர். 5 மணி நேரம் வரை விமானம் புறப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி கார்கள் செல்லும் பாதையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கார் போக்குவரத்து பாதித்தது. பின்னர் இரவு 11.30 மணியளவில் தான் விமானம் புறப்பட்டுச் சென்றது.
‘‘வானிலை மாற்றம், விமான சிப்பந்திகள் பணி மாற்றம் போன்ற காரணங்களால் விமானம் புறப்படுவதில் தாமதமானது. பயணிகள் தரையில் இறங்கியது குறித்து தெரியாது’’ என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் வீசியதன் காரணமாக டில்லி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட 21 விமானங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.