டில்லி:

நவீன வசதிகளுடன் கூடிய  இந்தியாவின் முதல் ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மறுதினம்(மே-22) முதல்   மும்பை –  கோவா இடையே  இயங்க இருக்கிறது.

இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயிலாக தேஜாஸ் எக்ஸ்பிரஸ் குறிப்பிடப்படுகிறது.  மற்ற என்த ரயில்களிலும் இல்லாத பல நவீன வசதிகள் இந்த தேஜாஸ் ரயிலில் உள்ளன.

மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் வண்ணத்தில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய வினைல் ஸ்டிக்கர் இந்த ரயிலின் வெளிப்புறத்தை அலங்கரிக்கிறது.

இதுவரை இல்லாத மாதிரியாக, இந்த ரயிலில் தானியங்கி கதவுகள் பொறுத்தப்பட்டுளளன. உட்புறத்தில் இருக்கைகள் மிக தாராள இடவசதியுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், நெருக்கடி இல்லாமல் ரிலாக்ஸாக பயணிக்கலாம்.

இந்த ரயிலில் 3+2 இருக்கை அமைப்புடன் 72 பேர் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளும், 2+2 ஆகிய இருக்கை அமைப்புடன் 56 பேர் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளும் வடிவமைக்கப்பட்டு  உள்ளன.

ஆம்னி பேருந்துகளில் இருப்பது போல,  சொகுசான புஷ் பேக் சீட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியாக 9 இன்ச் திரை இருக்கும். இதில் திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காணலாம். மேலும் ரயில் பற்றிய தகவல்களையும் பெறலாம்.  வைஃபை இன்டர்நெட் வசதி உள்ளிட்டவையும் இருக்கின்றன. திண்பண்டங்களை வைத்துக்கொள்வதற்கான சிறிய டேபிளும் உண்டு.

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் உணவு பதார்த்தங்களை சூடு படுத்திக் கொள்வதற்கான ஓவன், காபி மற்றும் டீ வழங்கும் எந்திரம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை பொருத்தப்பட்டு இருக்கும்.

கழிவறைகள் மிக நவீன முறையில் இருப்பதுடன், கை கழுவுவதற்கான சோப்பு திரவம் விநியோகிக்கும் சாதனம், தானியங்கி தண்ணீர் குழாய்கள் போன்றவை பொருத்தப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு பெட்டியிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  தீ பிடிப்பது குறித்து எச்சரிக்கும் சாதனம், துர்நாற்றத்தை  ரயில் பெட்டியிலிருந்து அகற்றும் சாதனம் உள்ளிட்டவையும் உள்ளன.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் பெட்டிகள் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகள் கொண்ட இந்த ரயில் பெட்டிகள்தான் இந்தியாவின் அதிவேகத்தில் செல்லும் திறன் பெற்ற ரயில் பெட்டிகளாகும்.  .

மும்பை – கோவாவை தொடர்ந்து மும்பை -சூரத் மற்றும் டில்லி -லக்னோ இடையிலான வழித்தடங்களில் இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.