ஸ்ரீஹரிகோட்டோ:

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதிஷ்தவான்  விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘கலாம் சாட்’ , ஸ்டுடன்ட் பேலோடு,  ‘மைக்ரோசாட்-ஆர்’,  ஆகிய  செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான  கவுன்டவுன் நேற்று இரவு தொடங்கப் பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ (DRDO) பயன் பாட்டிற்காக 690 கிலோ எடைகொண்ட மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக் கோள் மற்றும், 34 கிராம் எடையில் ‘கலாம்சாட்’ என்ற மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோளும்   இன்று இரவு 11.37 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்டவுன் நேற்று இரவு 7.37 மணிக்கு தொடங்கி உள்ளது.

இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் கூறும்போது,  இன்று ஏவப்பட்ட உள்ள செயற்கைகோள்  புதிய தொழில்நுட்பம் மூலமாக விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக கூறினார்.

மேலும், நடப்பாண்டில் சந்திரயான்-2 உள்பட 32 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 29 அன்று. பூமிக்குரிய கண்காணிப்பு செயற்கைக்கோளை ஹைசிஸ் பிஎஸ்எல்சி சி 43( PSLV C43) நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ செலுத்தியது குறிப்பிடத்தக்கது.  கடந்த 25 ஆண்டுகளில், இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் 53 இந்திய செயற்கை கோள்களும் மற்றும் 269 வெளிநாட்டு செயற்கை கோள்களும் விண்ணில் ஏவி சாதனை படைத்து உள்ளது.