“தீபாவளிக்கு என்ன பண்ணுவது ?” என்று மேட்டுக்குடி மக்கள் ஒரு மாதிரியும், சாமானிய மக்கள் வேறு மாதிரியும் யோசிக்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பு கடை முதலாளி அஞ்சலி ஜெயின் மேட்டுக்குடி மக்களை குறிவைத்து இந்த பண்டிகைக்கு ‘ஸ்வர்ண பிரசாத்’ என்ற பெயரில் புதிதாக ஒரு இனிப்பு வகையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

“சில்கோசா” எனும் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பிரீமியம் உலர் பழமான பைன் நட்ஸ் (Pine nuts)-களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த ஸ்வீட்டில் ‘தங்க பஸ்பம்’ கலந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஜெயின் கோவிலில் இருந்து பெறப்பட்ட 24 காரட் உண்ணக்கூடிய தங்க வேலைப்பாடுடன் கூடிய இந்த இனிப்பு இந்திய ஆயுர்வேத மரபைப் பின்பற்றி தயாரிக்கப்படுவதாகவும் இது விலங்கு கொழுப்பு அல்லது பால் கூட கலக்காமல் “விலங்கு கொடுமை இல்லாத” இனிப்பு என்று அந்தக் கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

குங்குமப்பூ, பைன் நட்ஸ் என இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் விலைமதிக்க முடியாத பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த ‘ஸ்வர்ண பிரசாத்’தின் விலையை ஒரு கிலோ ரூ. 1.1 லட்சத்திற்கு விற்பனை செய்து வருகிறார்.

மேட்டுக்குடி மக்களை மட்டுமே இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த இனிப்பு வகை தவிர நடுத்தர மக்களுக்காக இந்தக் கடையில் 24 காரட் தங்கத்தால் நிரப்பப்பட்ட பல்வேறு உயர் ரக இனிப்புகளும் உள்ளன, அவற்றில் பிஸ்தா லோஞ்சே ரூ.7,000/கிலோ, காஜு கட்லி ரூ.3,500/கிலோ, லட்டு ரூ.2,500/கிலோ, ஆடம்பரமான ரஸ்மலாய் வகைகள் ஆகியவை அடங்கும்.