டெல்லி: இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனை பயணம் டிசம்பரில் (2025) மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் நாராணயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான், இந்த ஆண்டு டிசம்பரில் அதன் முதல் சோதனைப் பயணத்தை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் இன்று தெரிவித்தார். அதன்படி முதற்கட்டமாக ரோபோவுடன் ககன்யான் சோதனை பயணம் நடைபெற உள்ளது.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரோ தலைவரானபேராசிரியர் நாராயணன், ககன்யான் 80 சதவீத சோதனைகளை முடித்துள்ளது. அதாவது, இதுவரை ஏழாயிரத்து 700 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், ககன்யான் பணி சிறப்பாக முன்னேறி வருவதாகவும் கூறினார். மீதமுள்ள இரண்டாயிரத்து 300 சோதனைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
இஸ்ரோவின் பிற சாதனைகளை எடுத்துரைத்த பேராசிரியர் நாராயணன், இந்த ஆண்டு இதுவரை GLEX-2025 மற்றும் உயர் உந்துதல் மின்சார உந்துவிசை அமைப்பு உட்பட 196 சாதனைகள் எட்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அமெரிக்காவின் 6,500 கிலோகிராம் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இந்திய ஏவுதளத்திலிருந்து ஏவப்பட உள்ளதாக குறிப்பிட்டவர், ஆதித்யா எல் 1 இலிருந்து 13 டெராபிட் தரவு இந்த ஆண்டு முழுவதும் அறிவியல் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.
ஆக்ஸியம்-4 மிஷனில் இஸ்ரோவின் பங்கு பற்றிப் பேசுகையில், விண்வெளித் தலைவர், இஸ்ரோவின் தொழில்நுட்ப நிபுணத்துவம் இந்த பயணத்தின் பாதுகாப்பான ஏவுதலை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார். ஃபால்கன்-9 ராக்கெட்டின் முதல் கட்டத்தில் காணப்பட்ட LOX கசிவை இஸ்ரோ சரிசெய்து, பேரழிவு தோல்வியைத் தவிர்த்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 4 மாதங்களில் இஸ்ரோ பல சாதனைகளை செய்துள்ளது. பேரிடர் எச்சரிக்கை துறையில் இஸ்ரோ ஒரு சிறந்த பணியைச் செய்து வருகிறது. ஐ.நா. சபையின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் மொத்தம் 13 இலக்குகள் இஸ்ரோவால் ஆதரிக்கப்படுகின்றன. ‘கிரயோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தில் நாங்கள் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளோம். சோதனைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன.
உள்நாட்டு மயமாக்கலில் பல நடவடிக்கைகள் சிறப்பாக முன்னேறி வருகின்றன. முதல் ஆளில்லா விண்கலமான ககன்யான் 1, இந்த ஆண்டு இறுதிக்குள், ஒருவேளை டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும். அதில், அரை மனித உருவமான வியோமித்ரா (ரோபட்) பறக்கப்போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.