மாஸ்கோ

ஷ்ய நாட்டில் நடந்த உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி வெற்றி பெற்றுள்ளார்.

ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.   இதில் பல நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துக் கொண்டனர்.  இந்தப் போட்டியின் மகளிர் பிரிவின் இறுதிச் சுற்றில் சீனா வீராங்கனை லீ டிங்ஜி உடன் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி போட்டி இட்டார்.

இந்த போட்டியின் 12 சுற்றுக்களில் இருவரும் தலா 9 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.  இதனால் வெற்றியைத் தீர்மானிக்க மற்றொரு ஆட்டம் நடந்தது.  இதில் கோனேரு ஹம்பி அதிக புள்ளிகள்  பெற்று வெற்றி அடைந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இந்த இறுதி சுற்றுப் போட்டியின் போது முதல் ஆட்டத்தில் தோல் அடைந்த போதிலும் கொனேரு ஹம்பி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். கோனேரு ஹம்பி ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஆவார்.  தற்போது 32 வயதாகும் இவர் கடந்த 2002 ஆம் வருடம் கிரான்ட் மாஸ்டர் ஆனார்.   மேலும் கடந்த 2007 ஆம் வருடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.

இது வரை இந்த போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.   கடந்த 2017 ஆம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் இந்த போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்னும் புகழை அடைந்தார்.  தற்போது இந்த போட்டியில் வென்ற இரண்டாம் இந்தியராகவும் மகளிர் பிரிவில் முதல் இந்தியராகவும் கோனேரு ஹம்பி பெருமை பெற்றுள்ளார்.