டெல்லி: இந்தியாவில் ஐடி துறை கடுமையான சரிவை சந்தித்து வருவதாகவும், கடந்த நிதி ஆண்டில் 90 சதவிகிதத்திற்கும் அதிக அளவில் சரிவை சந்தித்து உள்ளதாகவும்  மக்களவையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஐடி துறையில் பணியாற்றி வரும் லட்சக்கணக்கானோர் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

அதிகரித்து வரும், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி. ஐடி சேவைகளின் அமைப்பை முழுவதுமாக மாற்றி வருகிறது. AI வளர்ச்சி, ஐடி துறைக்கு நேரடி சவாலாக மாறியுள்ளது. இதற்கு இணையாக, 2021-இல் முதலீடு உச்சத்தை எட்டிய பின்னர், ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான முதலீடுகள் கடுமையாக சரிவடைந்துள்ளது.

இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை 90%க்கும் அதிகமாக சரிவை கண்டுள்ளது.  குறிப்பாக, இந்தியாவின் ஐடி மையமான கர்நாடகாவில், கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கையில்  அதிக அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது, நிதியாண்டு 2020 இல் 2,544 ஆக இருந்த சரிவு 2024/25ம்  நிதியாண்டு வெறும் 212 ஆக குறைந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 நாராயண மூர்த்தி தலைமையிலான இன்ஃபோசிஸ் மற்றும் அசிம் பிரேம்ஜியின் விப்ரோ போன்ற ஐடி நிறுவனங்களின் தாயகமாக இருக்கும் கர்நாடகாவில், இந்தக் காலகட்டத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் உருவாக்கத்தில் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சமீபத்தில் மக்களவையில் மத்திய அரசு  வெளியிடப்பட்ட தகவலின்படி, 2024-25 நிதியாண்டில் உள்ள ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை 2,419 ஆகக் குறைந்துள்ளது, இதற்கு முன் 2019-20 நிதியாண்டில் 16,388 நிறுவனங்கள் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய வீழ்ச்சிக்கு காரணமாக பொருளாதார சிக்கல்கள், முதலீட்டு குறைவு, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி போன்றவை காரணமாக இருக்கலாம்.

இருப்பினும், பல சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ஐடி துறையின் முக்கிய தலைவர்கள், தற்போதைய வணிக மாடல்களை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக கார்ப்பரேட் அலுவல்கள் அமைச்சக (MCA) தரவுகளின்படி, கடந்த 24ம் தேதி மக்களவையில் சமர்பிக்கப்பட்ட பதிலில், இந்தியாவின் ஐடி மையமான கர்நாடகாவில், புதிய ஐடி நிறுவனங்கள் உருவாகும் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் கர்நாடகாவில் புதிதாக தொடங்கிய ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை 2020 நிதியாண்டில் 2,544 இலிருந்து 2025 நிதியாண்டில் 212 ஆக 90%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு, Infosys, Wipro போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களின் தலைமையகம் அமைந்துள்ள இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமாக திகழ்கிறது. அந்தவகையில், பெங்களூரு, “இந்தியாவின் Silicon Valley என அழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்கு பல்லாயிரக்கணக்கான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள், மற்றும் மென்பொருள் வளர்ச்சி மையங்கள் செயல்படுகின்றன.

ஐடி துறையில் ஏற்பட்ட கடுமையான சரிவுக்கு பல்வேறு காரணங்கள் ஒன்றிணைந்து பங்களிப்பதாக  தெரிவித்துள்ளதுடன்,, சமீப ஆண்டுகளில், புதிய நிறுவனங்களுக்கு சந்தை மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என்றும், எங்கு இருந்தாலும் கடும் போட்டி நிலவுவது மட்டுமின்றி, நீண்டகால பொருளாதார மந்தநிலை மற்றும் உலகளாவிய அரசியல் நிலையிலான பல மாறுபாடுகளால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக பொருளாதார வல்லநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால்  பல ஐடி நிறுவங்களில் விருப்ப செலவுகள் மிகக் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், புதிய ஐடி நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், மற்றொரு முக்கிய ஐடி மையமான மகாராஷ்டிராவிலும் புதிய ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. நிதியாண்டு 2020 இல் 2,483 ஐடி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், நிதியாண்டு 2025ல் இது 375 ஆகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் (TCS – Tata Consultancy Services) மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் அதே நேரத்தில் Tech Mahindra, மகாராஷ்டிராவின் மற்றொரு முக்கிய ஐடி நிறுவனம், புனேவில் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கானாவிலும் புதிய ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

நிதியாண்டு 2020ல் 2,077 ஐடி நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருந்த நிலையில், நிதியாண்டு 2025ல் இது வெறும் 233 ஆக குறைந்துள்ளது. தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத், பல்வேறு ஐடி நிறுவனங்களுக்கு முக்கிய மையமாக இருக்கிறது. அதன்படி, நடுத்தர அளவிலான ஐடி நிறுவனமான Cyient இதே நகரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி. ஐடி சேவைகளின் அமைப்பை முழுவதுமாக மாற்றி வருகிறது. AI வளர்ச்சி, ஐடி துறைக்கு நேரடி சவாலாக மாறியுள்ளது. இதற்கு இணையாக, 2021-இல் முதலீடு உச்சத்தை எட்டிய பின்னர், ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான முதலீடுகள் கடுமையாக சரிவடைந்துள்ளது.

இருப்பினும், இந்த ஐடி நிறுவனங்களின் வீழ்ச்சி பெரிய மாநிலங்களுக்கு மட்டுமல்ல, சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் புதிய ஐடி நிறுவனங்கள் மிகக் குறைவாக உருவாகியுள்ளன.  புதிய ஐடி நிறுவனங்கள் உருவாகும் வீதம் குறைவதுடன், மூடப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, நிதியாண்டு 2025-ல் மட்டும் 2,300 ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கர்நாடகாவில் மட்டும் 440 நிறுவனங்கள் மூடப்பட்டன. மகாராஷ்டிராவில் 459 நிறுவனங்கள் முடங்கின.  இதேபோல், 2020 நிதியாண்டில், 9,100க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும்,  ஐடி துறையில் சீரற்ற வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இரண்டு பெரிய ஐடி சேவை நிறுவனங்களான இன்ஃபோசிஸ் மற்றும் எச்.சி.எல்.டெக் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம் காரணமாக, ஐடி வணிக மாடல்கள், தற்போது செயல்பட முடியாத நிலையை அடைந்துவிட்டன என எச்சரித்துள்ளன.

இதுகுறித்து HCLTech CEO விஜய்குமார் கூறும்போது,   ஐடி துறையில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் காரணமாக, கடந்த 30 ஆண்டுகளாக வளர்ச்சி கண்ட நிலையில், இனிமேல், இந்த பாரம்பரிய வளர்ச்சி முறை செயல்பட முடியாது ஏனென்றால், “ஐடி சேவைகளின் பாரம்பரிய வணிக மாதிரி முடிவுக்கு வந்துவிட்டது” என்று கவலை தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு தொழில்நுட்ப சேவை வழங்குவதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. சுமார் 21 லட்சம் கோடி முதல் ரூ.25 லட்சம் கோடி  ரூபாய் அளவுக்கு மென்பொருள் வர்த்தகம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால்,  சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, ஐடி தேவையானது சரிவினைக் கண்டு வருவதாகவும்,  இதன் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்கள், சர்வதேச ஐடி நிறுவனங்கள் என பலவும் மோசமான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக டெக்னாலஜி ஆய்வு நிறுவனமாக ISG தெரிவித்துள்ளது.

மேலும் வளர்ந்து வரும் ஏஐ போன்ற புதிய தொழில்நுட்பங்களால்,  ஐடி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இது ஐடிக்காக நிறுவனங்களின் செலவினை குறைக்க வழிவகுத்துள்ளதாகவும், இதனால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்க லேஆஃப் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

ஏற்கனவே கடந்த 2023-24ம் ஆண்டு மட்டும் Tata Consultancy Services, Infosys and Wipro ஆகியவை முன்னணி  நிறுவனங்களிலும் சுமார் 65 ஆயிரம் ஊழியர்கள் குறைக்கப்பட்டு உள்ளனர். அதாவது பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.  அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டும் பெருமளவில் ஊழியர்கள் குறைப்பு நடத்தப்பட்டு உள்ளது.

உலக அளவிலான பொருளாதாரத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை மற்றும் ரஷ்யா உக்ரைன், காசா இஸ்ரேல் போர்களால் மென்பொருள் மீதான செலவினங்களை நிறுவனங்கள் குறைத்து வருவதாலும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளாலும் இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஆர்டர்கள் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஐடி நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன.  இது இந்திய இளைஞர்கள் சமுதாயத்தினரிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.

இன்றைய சூழலில் பெரும்பாலோர் நம்பிக்கைக்கு உரிய பணியாக ஐடி துறை இருந்து வரும் நிலையில்,  அந்த துறையானது சரவை எதிர்நோக்கி இருப்பது, இளைய சமுதாயத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.