நான்கே மாதங்களில் இந்திய வளர்ச்சி விகிதத்தை குறைத்து மாற்றி அமைத்துள்ள பன்னாட்டு நிதியமைப்பின் அறிவிப்பினால், இந்திய பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2019ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3% என்கிற அளவில் இருக்கும் என கடந்த ஏப்ரல் மாதம் கணித்திருந்த ஐ.எம்.எஃப், தற்போது அதை மாற்றி 6.1% வளர்ச்சி விகிதமே எதிர்ப்பார்க்க முடியும் என்று குறைத்து கணித்துள்ளது. தனது ஏப்ரல் மாத கணிப்பிலிருந்து 1.2% வளர்ச்சி விகிதத்தை பன்னாட்டு நிதியமைப்பு தற்போது குறைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
2018-ல் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் 6.8%, ஐ.எம்.எஃப். தனது உலகப் பொருளாதாரப் பார்வையில் 2019ம் ஆண்டுக்கான இந்திய வளர்ச்சி விகிதம் 6.1% என்கிற அளவில் இருக்கும் என்று கணித்துள்ளது. ஆனால் 2020ம் ஆண்டு வாக்கில் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு 7% வளர்ச்சியை நோக்கி செல்லும் என்றும் பன்னாட்டு நிதியமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் 2019ம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சியை 6% என்கிற அளவுக்கு உலக வங்கியும் குறைத்திருந்த நிலையில், உள்நாட்டில் தேவைப்பாடு எதிர்பார்ப்பை விட மந்தமாக இருக்கும் என்றும், அதனாலேயே பொருளாதார வளர்ச்சி 1.2% குறையும் என்று பன்னாட்டு நிதியமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.