கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சுரங்க பாதை அமைகிறது.
கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், நகரின் கிழக்கு,மேற்கு பகுதிகளை இணைக்கும் திட்டத்திற்காக ஹுக்ளி ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் சுரங்க பாதை அமைக்கிறது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள், 2022ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக 2,000 கோடி ரூபாயை இந்திய ரயில்வ வாரியத்திடம் இருந்து கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பெறுவதற்காக காத்திருக்கிறது. கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு ஏற்கனவே 4160 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.
காலதாமதம் காரணமாக மொத்த திட்ட செலவு 14 கிலோ மீட்டருக்கு 4,900 கோடி ரூபாயில் இருந்து 17 கிலோ மீட்டருக்கு 8,600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜப்பான் நிறுவனம் இந்த மெட்ரோ சேவையை அமைக்க 48.5 சதவீதம் கடன் கொடுத்துள்ளது.
ஹுக்ளி ஆற்றில் அமைய உள்ள புதிய பாதை மூலம் நாள்தோறும் 9 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா நகரின் மக்கள் தொகையில் 20 % பேர் தினமும் இந்த நீருக்கடியிலான மெட்ரோவில் பயணம் செய்யும் போது அவர்களின் பயண நேரம் 20 நிமிடங்கள் தான் என்பது கூடுதல் தகவல்.
மொத்த போக்குவரத்து தேவையில் 40% இந்த இரண்டு மெட்ரோ சேவைகளால் கையாளப்படும். சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்த கொல்கத்தா நகரை பாதுகாக்கலாம் என்று கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் மனாஸ் சர்க்கார் கூறி இருக்கிறார்.