இந்திய ரயில்வே தனது நிலையான ஓட்டத்தின் அடுத்த கட்டமாக ஹைட்ரஜன் ரயிலை வரும் மார்ச் 31ம் தேதி முதல் இயக்க உள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்த பசுமை இயக்கத்தில் இணைந்துள்ள இந்தியா தனது முதல் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்த உள்ளது.

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை ஐ.சி.எப்.பில் தயாரான இந்த ரயில் வடக்கு ரயில்வேயின் டெல்லி மண்டலத்தில் ஜிந்த் – சோனிபட் இடையே இயக்கப்படவுள்ளது.

சுத்தமான எரிசக்தி போக்குவரத்து திட்டத்தின் கீழ் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் 35 ரயில்களை உற்பத்தி செய்ய 2023 – 24ம் நிதியாண்டில் ரூ. 2800 கோடியை ரயில்வேத் துறை ஒதுக்கீடு செய்தது.

உலகின் மற்ற இடங்களில் இயக்கப்படும் ஹைட்ரஜன் ரயிலின் அதிகபட்ச குதிரைத்திறன் 500 முதல் 600 HP என்ற நிலையில் இந்தியாவில் இயக்கப்பட உள்ள இந்த வகை ரயில்கள் அதைவிட இரண்டு மடங்கு அதிக திறன் கொண்டதாக அதாவது 1200 HP திறன் கொண்டது.

இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் வரும் மார்ச் 31ம் தேதி இதன் முதல் பயணம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவில் இருந்து கிடைக்கும் மின்சார சக்தி மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்கள் வெறும் நீராவியை மட்டுமே வினைபொருளாக வெளியேற்றும் என்பதால் இது சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆய்வுகள் மூலம் தற்போது தெரியவந்துள்ளதை அடுத்து உலக நாடுகள் பலவும் ஹைட்ரஜன் ரயிலுக்கு மாற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.