கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல வருட தாமதங்களுக்குப் பிறகு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதை முடிக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

2020 மற்றும் 2021 க்கு இடையில் நடத்தப்படவிருந்த புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ காலக்கெடுவை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.

“சாதி கணக்கெடுப்பைச் சேர்ப்பதா இல்லையா என்ற ஒரே காரணத்தால் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் இந்த கணக்கெடுப்பு விரைவில் தொடங்கலாம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளது.

மார்ச் மாதத்தில், நாடு தழுவிய கணக்கெடுப்புக்கான ஆயத்த நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்திருந்தது. “மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பல ஆயத்த நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன, மேலும் தொழில்நுட்ப புதுப்பிப்பு நடந்து வருகிறது” என்று அப்போது அமைச்சகம் கூறியிருந்தது.

வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் இதுபோன்ற 16வது கணக்கெடுப்பாகும்.

தரவு சேகரிப்புக்கான ஒரு மொபைல் செயலி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பல்வேறு பணிகளை நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு போர்டல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் முதல் ஒத்திசைவான மற்றும் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. COVID-19 காரணமாக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.

சாதி தரவு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இருக்கும் என்று அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது. இதையடுத்து ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது கூடுதலாக ஒரு கேள்வி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கெடுப்பில் மொத்தம் 32 கேள்விகள் வரை இருக்கலாம் என்று HT அறிக்கை கூறியது. மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாடு தழுவிய மிகப்பெரிய கணக்கெடுப்பு – தற்போதுள்ள திட்டங்களின் தாக்கம் குறித்த முக்கிய உள்ளீடுகளை வழங்கும் அதே வேளையில், திட்டமிடல் மற்றும் கொள்கை வகுப்பதில் அரசாங்கத்திற்கு உதவுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது ?