இந்தியாவில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜம்மு கோட்ட திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு ரயில் திட்டங்களைத் தொடங்கி வைத்த மோடி, கடந்த பத்தாண்டுகளில் ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதாகக் கூறினார்.

இது இந்தியாவின் இமேஜை மாற்றுவதற்கும், மக்களின் மன உறுதியை உயர்த்துவதற்கும் வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

50 க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர் சமீபத்தில் இந்த ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறினார்.

அதிவேக ரயில்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், அதிக தூரத்தை குறைந்த நேரத்தில் கடப்பதை மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த மாற்றத்தை அடுத்து இந்தியாவில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நம்பிக்கையுடன் கூறினார்.

உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குதல், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணைப்பை அதிகரிப்பது, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையை ஆதரிப்பது ஆகியவை ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்று அவர் அப்போது குறிப்பிட்டார்.