நிமோனியா போன்ற கொடிய பாக்டீரியா நோய்த்தொற்றுகளுக்கு எதிராக 10 மடங்கு அதிக செயல்திறன் கொண்ட ‘நாஃபித்ரோமைசின்’ என்ற ஆண்டிபயாடிக் எந்த வித ஆரவாரமும் இன்றி கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘நாஃபித்ரோமைசின்’ இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆண்டிபயாடிக் என்பதும் இது அசித்ரோமைசின் போன்ற மருந்துகளை விட பத்து மடங்கு அதிக செயல்திறன் கொண்டதாகவும் மற்றும் குறுகிய காலத்தில் பலனளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
இந்த மருந்து நீண்ட காலத்திற்கு நுரையீரலில் தங்கியிருக்கும் என்பதால், ஒரு நாளுக்கு ஒரு முறை, மூன்று நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் வகையில் மிகக்குறுகிய (அல்ட்ரா-ஷார்ட்) சிகிச்சையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் (Department of Biotechnology – DBT) கீழ் இயங்கும் பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சிலின் (Biotechnology Industry Research Assistance Council – BIRAC) ஆதரவுடன் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வொக்கார்ட் லிமிடெட் (Wockhardt ) நாஃபித்ரோமைசினை உருவாக்கியுள்ளது.
மிஃனப் (Miqnaf) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆன்டிபயாடிக் மருந்தின் சாஃப்ட் லான்ச் (soft launch)-ஐ மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.
நிமோனியாவால் உலகளவில் ஆண்டுதோறும் பலலட்சம் பேர் மரணமடையும் நிலையில் நாஃபித்ரோமைசின் என்ற புதிய ஆன்டிபயாடிக் அதில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாஃபித்ரோமைசின் கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சி 14 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி உலகளவில் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் 3 கட்ட மருத்துவப் பரிசோதனைகளில், நிமோனியாவுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த மருந்து 97 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறனைக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.