மும்பை: கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவின் மே மாத ஏற்றுமதி 36.5% என்ற அளவிலும், இறக்குமதி 51% என்ற அளவிலும் குறைந்ததால், வர்த்தகப் பற்றாக்குறை 3.1 பில்லியன் டாலர் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; ஏப்ரல் மாதத்தில் வர்த்தக ஏற்றுமதி 60.3% என்ற அளவிலும், இறக்குமதி 58.7% என்ற அளவிலும் சரிவை சந்தித்தன. மே மாதத்தில், அரிசி, மருந்து பொருட்கள், மசாலா, இரும்புத் தாது உள்ளிட்ட முக்கியமான பொருட்களின் ஏற்றுமதி மட்டுமே அதிகரித்திருந்தன.
இறக்குமதியை பொறுத்தவரை இரும்பு தாது மூலப்பொருள், பொறியியல் பொருட்கள் ஆகியவை வளர்ச்சியைக் காட்டியுள்ளன. மே மாத ஏற்றுமதி 36.5% (19.5 பில்லியன் டாலர்) குறைந்தது. இறக்குமதி 51.05% (22.20 பில்லியன் டாலர்) குறைந்துள்ளது.
ஏற்கனவே, பொருளாதார மந்தநிலையில் இருந்த இந்திய வர்த்தகம், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால் மேலும் பாதிப்பை சந்தித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டில் சர்வதேச அளவில் வர்த்தகம் 13% முதல் 32% வரை வீழ்ச்சியை சந்திக்குமென உலக வர்த்தக அமைப்பு கணித்துள்ளது.
இதற்குமுன் உலகம் சந்தித்திராத சுகாதார நெருக்கடி மிக்க சூழல் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் பொருளாதார தாக்கத்தை கணிக்கப்பட்ட அளவுக்கு சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.