தோகா: ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதலில், இந்திய வீரர் சவுரப் செளத்ரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி. இதில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவுப் போட்டியில் இந்தியாவின் 17 வயது சவுரப் செளத்ரி கலந்துகொண்டார். இவருடன் அபிஷேக் வர்மாவும் களமிறங்கினர்.
இவர்களில் சவுரப் சவுத்ரி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள ஏற்கனவே தகுதிபெற்றவர். இந்திய வீரர்கள் இருவருமே இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றனர். ஏற்கனவே ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற சவுரப் சவுத்ரி, இந்தமுறையும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இறுதிச் சுற்றில் 244.5 புள்ளிகளைப் பெற்ற அவர், இரண்டாவது இடத்துடன், வெள்ளிப் பதக்கத்தையேக் கைப்பற்றினார். இச்சுற்றில் தங்கம் வென்றவர் வடகொரியாவின் கிம் சங் குக். இவர் பெற்ற புள்ளிகள் 246.5 ஆகும். இது ஒரு உலக சாதனையாகும். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் 5வது இடமே பிடித்தார்.