ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக வளைகுடா முழுவதும் போர் மூண்டுள்ளது.

ஜோர்டான் முதல் கத்தார் வரை டஜன் கணக்கான நாடுகளை குறிவைத்து ஈரான் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனால், குவைத், துபாய், அபுதாபி, சவுதி உள்ளிட்ட இடங்களுக்கு வேலைக்காக செல்லவிருந்த ஆயிரக்கணக்கானோர் இந்திய விமான நிலையங்களில் பரிதவித்து வருகின்றனர்.

ஈரான், இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், ஈராக், ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் விமான போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து அந்நாடுகளுக்கு செல்ல வேண்டிய தொழிலாளர்கள் பலரும் நிறுவனங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் இருந்து சுற்றுலா சென்ற பயணிகள் பலரும் மீண்டும் இந்தியா திரும்ப முடியாமல் அந்த நாடுகளில் சிக்கியுள்ளனர்.

இதில், துபாய் மற்றும் அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டு பயணிகளின் விசா காலம் முடிவடைந்தாலும் விமான சேவை மீண்டும் துவங்கும் வரை அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளிலேயே தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தவிர, அவர்களின் ஹோட்டல் பில்லை அந்நாட்டு அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், குறித்த நேரத்தில் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லமுடியாத இந்தியர்கள் அருகில் உள்ள தூதரகத்தை அணுகி கால அவகாச நீடிப்புக்கு விண்ணப்பிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகள் வழியாக செல்லும் நீண்டதூர விமான சேவைகளும் போர் சூழல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த விமானங்களை தேர்வு செய்த பயணிகளும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

[youtube-feed feed=1]