டில்லி
உலக நாடுகளில் அதிகபட்சமாக 90% நேரத்தை இந்தியர்கள் மொபைலில் செலவிடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
தற்போது உலகெங்கும் மொபைல் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணைய சேவைகள், மற்றும் பிரபல சமூக தளங்களான வாட்ஸ்அப் , முகநூல் மற்றும் டிவிட்டர் போன்றவைகளில் கணக்கு இல்லாத மக்களை காண்பதே அரிதாகி வருகின்றது. இவற்றை மொபைல் மூலமாகவே பெரும்பாலானோர் பார்த்து வருகின்றனர்.
இது குறித்து சர்வதேச நிறுவனமான காம்ஸ்கோர் ஆய்வு ஒன்றை நிகழ்த்தி உள்ளது. அந்த ஆய்வில் அதிகபட்சமாக இந்தியர்கள் 89.87% பேர் மொபைலில் நேரத்தை செலவழிக்கின்றனர் என கண்டறியப்பட்டது. அடுத்த படியாக இந்தோநேசியா 87%லும் மெக்சிகோ 80%லும், அர்ஜெண்டினா 77%லும் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் தற்போது ஸ்மார்ட் போன்கள் மிகவும் மலிவான விலையில் கிடைப்பதாலும் டேட்டா கட்டணங்கள் வெகுவாக குறைந்துள்ளதாலும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
”பெரும்பாலான இந்தியர்கள் வேலை வாய்ப்பை மொபைல் மூலமும் உடல்நலச் சேவையை டெஸ்க் டாப் மூலமும் தேடி வருகின்றனர். மொத்தத்தில் அதிகமானோர் இணையத்தில் வீடியோ பார்ப்பதை அதிகம் விரும்புகின்றனர். உடனடி தகவலை சுமார் 13% பேர் விரும்புகின்றனர். உடனடி தகவலுக்கு அதிகம் உபயோகப் படுத்தப் படுவது வாட்ஸ்அப் என்பது குறிப்பிடத்தக்கது.